இது ஓர் தமிழ் தகவல் களஞ்சியம்

Sunday, 27 March 2016

கண்ணகியம்மன் தான் மடுமாதா!

“கண்ணகியம்மன் தான் மடுமாதா” என்பது பாப்பாண்டவருக்குத் தெரியுமா? என்கிறார் ஒரு சிங்களப் பேராசிரியர்!



இலங்கைக்கு வருகை தந்த பாப்பாண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் முதலாவது கத்தோலிக்க புனிதர் யோசப் வாஸ் (இந்தியக் கிறித்தவர்)  அடிகளாரை புனிதராக அங்கீகரித்ததுடன்,  தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் மன்னார் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற மடுமாதா ஆலயத்துக்குச் சென்று அங்கும் தமிழ் –சிங்களக் கத்தோலிக்க மக்களின் முன்னிலையில் திருப்பலி ஒப்புக் கொடுத்தார்.

 கண்ணகி அல்லது பத்தினி அம்மன் தான் மடுமாதாவாக உருமாற்றம் அடைந்ததாகவும் இன்று மன்னார் மருதமடுவில் மடுமாதா கோயில் என அழைக்கப்படும் கத்தோலிக்க தேவாலயம் உண்மையில் தமிழர்கள், கண்ணகியம்மன் எனவும் சிங்கள பெளத்தர்கள் பத்தினித்தெய்யோ (தெய்வம்) என்று போற்றும் பெண்தெய்வம் தான் எனப் பாப்பாண்டவர் அறிந்தால் நிச்சயமாக மகிழ்ச்சியடைவார் எனத் தான் நம்புவதாக, பத்தினி தெய்யோ பற்றி ஆராய்ச்சி செய்த  இலங்கையில் புகழ்பெற்ற பேராசிரியர் கனநாத் ஒபயசேகரா(Emeritus Professor of Anthropology at Princeton University ) கருத்து தெரிவித்துள்ளார்.
"I am sure the Pope will be pleased to know that Madhu was once a shrine for the Goddess Pattini, another virgin goddess worshipped by Sinhala Buddhists during a long historical period. And as for Joseph Vaz he would never have made it but for the support and encouragement of Kandyan kings, especially the gentle Vimaladharmasuriya II (1687-1707)."
மருதமடுவில் பாப்பாண்டவர் 2015

உலகப் புகழ் பெற்ற மடுமாதா கோயில், கிறித்தவத்தின் வருகைக்கு முன்பு கண்ணகி கோயிலாக இருந்தததாகவும், மன்னாரில் வாழ்ந்த சைவத்தமிழர்கள் புனித. பிரான்சிஸ் சேவியரின் பாதிரிமார்களால் கிறித்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டதும் நாளடைவில் கண்ணகி அம்மன் கோயில் கத்தோலிக்க மாதா கோயிலாக மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்து முன்பே பரவலாகப் பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் கூட, குறிப்பாக மருதமடு மாதாகோயிலுக்குப் பாப்பாண்டவரின் வருகைக்குப் பின்னர் ஓரு சிங்களப் பேராசிரியர் இந்த விடயத்தை மீண்டும் கிழப்பியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இன்று சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்குக் காரணம்- தமிழ்நாட்டில் நாயன்மார்களின் பக்திக்காலத்திலும், அதற்குப் பின்னரும் பெளத்தத்தின் வீழ்ச்சியால், அங்கிருந்து தப்பியோடிய தமிழ்ப்பெளத்தர்கள் இலங்கைக்கு வந்து, நாளடைவில் சிங்களவராக மாறியதை - அவரும் உறுதி செய்கிறார். அது மகாவம்ச காலத்திலிருந்தே தொடர்ந்து நடைபெறுகிறது. சில அரைவேக்காடுகள் இலங்கையில் தமிழர்கள் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமென்ன என்று கேட்கும் போது, அக்காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்த இலங்கையின் பூர்வீக குடிகளாகிய  தமிழர்களில் கணிசமானோர் பெளத்தத்தின் வருகையாலும், எலு/பாளி/சமக்கிருத/தமிழ்க்கலப்பினால் பெளத்த பிக்குகளால் உருவாக்கப்பட்ட சிங்கள மொழியினாலும், சிங்களவர் என்ற தனியடையாளத்தைக் கொண்டனர், பெளத்தத்துக்கு மதம் மாறாமல், சிவத் தமிழர்கள் என்ற தமது பூர்வீக அடையாளத்துடன், தமிழர்கள்  வடக்கு (யாழ்ப்பாணம்) நோக்கி நகர்ந்தனர். அதனால் தான் இன்று சிங்களவர்கள் தமிழர்களை விடப் பெரும்பான்மையாக உள்ளனர். வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் காணப்படும் பெளத்த விகாரைகளும், அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் வெறுமனே சிங்களவர்களுடையவை மட்டுமல்ல, பெளத்தத்தைத் தழுவிய தமிழ்ப்பெளத்தர்களுக்கும் சொந்தமானவை.

அவர் தனது கருத்தில், கண்ணகி - ஒரு தமிழ்ப்பெண்,  மன்னார் மாவட்டம் அக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் ஒரு பகுதி என்பதையும் வேண்டுமென்றோ அல்லது மறந்து போனதாலோ குறிப்பிடத் தவறி விட்டார். சைவத்திலிருந்து கிறித்தவத்துக்கு  மன்னாரில் பரதவர்கள் மதம்மாறிய செய்தியைக் கேள்விப்பட்ட யாழ்ப்பாண அரசன் சங்கிலி குமாரன், நல்லூரிலிருந்து மன்னாருக்குப் படைகளுடன் சென்று அவர்களனைவரையும்  கொன்று விட்டதால், கோபமுற்ற பிரான்சிஸ் சேவியர், மன்னாரில் கிறித்தவர்களின் மரணத்துக்குப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதமெழுதியும், கோவாவிலிருந்த  போத்துக்கேய கவர்னரையும் வற்புறுத்தியதால் தான், போத்துக்கேயர் முதலில் யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகிலேயே சைவத்தைக் காக்க தமது அரசுரிமையை இழந்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான்.

இலங்கையில் கண்ணகி (பத்தினி) வழிபாடு

இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மொழி, அரசியல்  சம்பந்தமான விடயங்களில் சில வேறுபாடுகள் இருந்தாலும், முருகனும், கண்ணகி(பத்தினி)யும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் பொதுவாக, இரண்டு இன மக்களும் உரிமையோடு சொந்தம் கொண்டாடும் தெய்வங்களாக, வழிபாட்டு முறைகளாக இன்றும் உள்ளன. இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் கண்ணகிக்குக் கோயில் உண்டு.

கோவலனைக் கொன்றதால் கோபமுற்ற சிலப்பதிகார நாயகி, மதுரையை எரித்தவுடன் தொடர்ந்து அங்கு வாழப் பிடிக்காமல்  தேவமகளாகி கடலைக் கடந்து கிழவியுருவில் இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கிய பின்னர் கடைசியாக வற்றாப்பளை என்று அழைக்கப்படும் வன்னியிலுள்ள பத்தாம் பளையில் தங்கி இளைப்பாறியதாக ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன்,  சேரன் செங்குட்டுவனின் அழைப்பையேற்று சிலப்பதிகார அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணகியின் சிலம்பையும், பிரம்பையும் சேரன் செங்குட்டுவனிடமிருந்து பெற்றுக்  கொண்டு வந்து, தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த கண்ணகி வழிபாட்டை  இலங்கையிலும், பரப்பினான் எனவும் நம்பப்படுகிறது. கயவாகு மன்னன் கண்ணகிக்குச் சிலையெடுத்த விழாவில் கலந்து கொண்டதை “கடல் சூழ் இலங்கைக் கயவாகு” என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படுகிறது.

கண்ணகியின் ஆபரணங்கள் ஊர்வலம்
“இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன் செங்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களுடன்  யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற சம்புகோளம் என்ற துறைமுகத்தில் வந்திறங்கினான்.. இலங்கையில் இம்மன்னனால் நிறுவப்பட்ட முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள அங்கணாக்கடவையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு பூநகரி வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது. அடையாளம் காணமுடியாத அங்கணாக்கடவை கண்ணகி கோயில் தற்போது கந்தரோடையில் உள்ள கதிரமலைக்கருகாமையில் இருந்ததாகவும் சரித்திர வல்லுனர்கள் கூற்று.”

ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணச் சைவத்தை ஆகமவிதிகளுக்குட்படுத்தி பார்ப்பனீயத்தை புகுத்தியிராது விட்டால், ஈழத்தில் சைவம் இன்று முற்று முழுதாக பார்ப்பனீய வாடையற்ற தமிழ்ச்சைவமாக இருந்திருக்கும். எல்லாம் வல்ல சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வமில்லை, அவரைத்  தவிர  எந்தச் சமணசமயத்துச் 'செட்டிச்சியையும்' வணங்கக் கூடாதென்றாராம் ஆறுமுக நாவலர். அதனால் பாரம்பரியமாக கண்ணகி கோயில்களாக இருந்த பல கோயில்கள், ஆறுமுகநாவலர் காலத்தில் ராஜேஸ்வரியம்மன், மனோன்மணியம்மன் மீனாட்சியம்மன் கோயில்களாகவும் மாற்றமடைந்தன என்றும் கூறுவர். இவ்வாறே தமிழ்நாட்டிலும் கண்ணகி வழிபாடு மாரியம்மன் வழிபாடாக உருமாற்றம் அடைந்தது.

தமிழ்நாட்டில் கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் அற்றுப் போனாலும், ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும்,(சிறப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்) கண்ணகியைக் கடவுளாகவும், இலங்கையின் காவல் தெய்வமாகவும் இன்றும் வணங்கி வருகின்றனர். மதுரையை எரித்துக் கோபமுற்ற கண்ணகியை குளிர வைக்க குளிர்த்திப் பாடல்கள் பாடி பொங்கலும் வைத்து  குளிர்த்தி விழாக்கள் சிறப்பாக இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றன. சிங்களவர்களும், தமிழர்களும் குழந்தை வரம் கேட்டும், நோய்களைத் தீர்க்கவும், மழை வேண்டியும்  பில்லி, சூனியத்தைப் போக்கவும்,  கண்ணகியை/ பத்தினித்தெய்வத்தை வழங்கும் வழக்கம் இன்றும் உண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்படும் ஈழத்தமிழர்களின் கோயில்களிலும் கூட, கண்ணகிக்குத் தனியான சன்னதி இருப்பதைக் காணலாம்.

"பாண்டி நாட்டிலே அதிசய மாங்கனி ஒன்று காணப்பட்டது. அம்பு எய்து விழுந்து அந்தரத்தில் தொங்கிய அதனை மன்னன் கையில் பெற்ற போது அது கையை சுடவே வீசி எறிந்துவிட்டு நெற்றியை கையால் துடைத்த போது அவனின் நெற்றிக்கண் மறைந்தது. மன்னனின் சொற்படி அரசி மாங்கனியை பொற்குடத்தில் இட்டு வைத்தாள். 3ம் நாள் அரசவைக்கு அதனை கொண்டு சென்று பார்த்த போது மாங்கனி பெண் குழந்தையாக இருந்தது. கணிதர் சொற்படி அதனை பேழையில் அடைத்து கடலில் இட்டனர். சோழ நாட்டிலே அது கரை ஒதுங்கி வளர்ந்து கோவலனை மணம் செய்ததாக கண்ணகி வழக்குரை கூறுகின்றது. ஆனால் சிலப்பதிகாரத்தில் இது காணப்படவில்லை.

பாண்டி நாட்டிலே பிறந்து சோழ நாட்டிலே வளர்ந்து சேர நாட்டிலே பத்தினித் தெய்வமாகிய கண்ணகி  ஈழமக்களின்  காவல் தெய்வமாகியது பற்றி ஈழத்தில் தமிழ் நூல்களை விட சிங்கள நூல்களே அதிகமாக உள்ளன. வழக்குரை காதை, ஊர் சுற்று காவியம் பொற்புறா வந்த காவியம் கண்ணகை அம்மன் குளிர்த்தி பாடல்கள் கண்ணகை அம்மன் அகவல் உருகுச் சிந்து என்பன தமிழிலுள்ள நூல்களாகும். சிங்களத்தில் இராசாவளி பத்தினி கதா கஜபாகு கதா சிலம்பு கதா பத்தினி தெய்யோ பத்தினி எனப் பலவுள்ளன."

“தென்னம் பழஞ்சொரியத் தேமாங் கனியுதிரவன்னி வழிநடந்த மாதே குளிர்ந்தருள்வாய்
வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து தோளாடை யாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்"

என்று பாடிக் கண்ணகியை குளிரச் செய்வர்.

- வியாசன்